நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, புதிய பிரதமர் பாலன் ஷா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஜென் Z’ (Gen Z) போராட்டங்களின் போது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு, வன்முறையைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பிரதமர் பாலன் ஷா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருந்தபோதும் கடமையைச் செய்யத் தவறியதற்காக இவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, அப்போதைய காவல்துறை உயரதிகாரிகள் மீதும் பிடி இறுகியுள்ளதால், நேபாள அரசியல் வரலாற்றில் இது ஒரு மிகமுக்கிய அதிரடித் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.