முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பேத்தியுமான கயல்விழிக்குச் சொந்தமான வணிகச் வளாகம் ஒன்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அங்குள்ள மின்தூக்கி பழுது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கும் கட்டட உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நேரில் பேசச் சென்ற இடத்தில் இரு தரப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கியின் கிளை அதிகாரியான ஹர்ஷீன் சிங் என்பவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான கண்காணிப்புக் கேமராப் பதிவுகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, வங்கி நிர்வாகத்தின் சார்பில் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கயல்விழியைக் காவல் எல்லைக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், சில நிமிடங்களிலேயே அவருக்குக் காவல் நிலைய அளவிலான பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
தங்கள் தரப்பு தவறுகளை மறைக்கவே இந்த விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீதான வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரியும் கயல்விழித் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சிவில் பிரச்சனையைத் தேவையின்றி நீதிமன்ற விவகாரமாக மாற்றியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இளந்திரையன், இரு தரப்பினரும் சுமூகமாகப் பேசி முடித்துக் கொள்ள வாய்ப்புள்ளதா என்பதைக் கேட்டறிந்தார். மேலும், இது தொடர்பாகக் காவல் துறையும் வங்கி நிர்வாகமும் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
