ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 21 நாட்களைக் கடந்தும் ஓயாத நிலையில், உலக நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. முக்கியமாக, ஈரான் ‘ஹார்முஸ்’ (Strait of Hormuz) கடல் பாதையை மூடியதால் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பனான சுவிட்சர்லாந்து தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்கா உடனடியாக ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், அந்நாட்டுக்குத் தேவையான ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என சுவிட்சர்லாந்து அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தங்கள் நாடு எப்போதும் நடுநிலை வகிக்கும் நாடு என்றும், போரை ஊக்குவிக்கும் விதமாக ஆயுதங்களை வழங்க முடியாது என்றும் சுவிட்சர்லாந்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் உதவி கோரியிருந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் இந்த ‘நோ’ சொல்லும் முடிவு அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே உதவி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தும் கையை விரித்துள்ளது டிரம்ப் நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலக எரிசக்தி சந்தையில் 20 சதவீத எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நட்பு நாடுகளின் இந்த விலகல் போரின் போக்கை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.