உத்தரப்பிரதேசம் ஜான்சியில், 18 வயது புட்டி என்ற இளம்பெண், காதல் தொடர்பு வைத்திருந்ததால், அவரது சொந்த அண்ணன் அரவிந்த் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சந்திரபுரா கிராமத்தின் வெறிச்சோடிய பகுதியில் உள்ள தாதா மகாராஜ் பிளாட்பாரம் அருகே ஞாயிற்றுக்கிழமை, மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் புட்டியின் உடல் மீட்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக, அரவிந்த் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் பிரஜாபதி (இருவரும் சுமார் 25 வயது) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தகவலின்படி, புட்டியின் காதலன் விஷால் (19) ஆகஸ்ட் 7ஆம் தேதி கொல்லப்பட்ட நிலையில், குடா கிராமத்தில் உடல் வீசப்பட்டு கிடைத்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு, புட்டி மற்றும் விஷால் வீட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில், குடும்பங்கள் வற்புறுத்தியதால் திரும்பி வந்தனர்.

பின்னர், பரஸ்பர ஒப்பந்தத்திற்குப் பிறகு சில காலம் அமைதியாக இருந்தும், இருவரும் மீண்டும் சந்திக்கத் தொடங்கினர். இதனால், புனேவில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் கிராமத்துக்கு வந்த அரவிந்த் கோபமடைந்து, நண்பர் பிரகாஷ் பிரஜாபதியுடன் சேர்ந்து இருவரையும் கொல்லத் திட்டமிட்டார்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை, வேலை வாங்கித் தருவதாக கூறி விஷாலை அழைத்துச் சென்ற இருவரும், அவரைக் கடத்திச் சென்று கொலை செய்தனர். அந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், சனிக்கிழமை, அரவிந்த் புட்டிக்கு மருந்து வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்த இரட்டை கொலை வழக்கில் அரவிந்த் மற்றும் பிரகாஷ் இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.