உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடும்ப தகராறில் மனைவி கபவானின் அந்தரங்க உறுப்பை வெட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, கச்சனாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்சார் (38), ஹாரிமௌ கிராமத்தைச் சேர்ந்த இரண்டாவது மனைவி நாஜ்னியுடன் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில், நாஜ்னி முதலில் கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் கண்களில் மிளகுத்தூள் தூவி, கத்தியால் பல இடங்களில் வெட்டியதோடு, அவரது மர்ம உறுப்பையும் துண்டித்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு விரைந்த குடும்பத்தினரை பார்த்ததும், குற்றம் சாட்டப்பட்ட மனைவி அறையிலிருந்து தப்பி ஓடினார்.
இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அந்சார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி ராய்பரேலி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர்.
அந்சாரின் சகோதரர் சுபியான் கூறுகையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு அந்சார், அயோத்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்துனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் 8 மாதங்களுக்கு முன்புதான் நாஜ்னியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்தார். திருமணம் ஆனதிலிருந்து இரண்டாவது மனைவி அடிக்கடி மிரட்டல்கள் விடுத்து வந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தைய இரவிலும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்சார் பயந்து போய் இரவு முழுவதும் விழித்திருந்தாலும், அதிகாலை தன்னை மறந்து தூங்கிய பிறகு தாக்குதல் நடந்தது. சம்பவத்தை அடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாட்சிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நாஜ்னி போலீசாரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார்.
ஜகதீஷ்பூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் விதான் சந்த் யாதவ் கூறுகையில், “காயமடைந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட மனைவிக்கு எதிராக IPC சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது காவலில் உள்ளார். விசாரணை முடிந்தவுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
