தேசிய தலைநகர் பகுதி (NCR) முழுவதும் பரவியுள்ள கடுமையான காற்று மாசுபாட்டை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கவலை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியிலிருந்து பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த காணொளியில், சுற்றியுள்ள பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மூட்டத்தால் மூடப்பட்டுள்ளதை காண முடிகிறது. மேலிருந்து பார்க்கும் போது, கீழே உள்ள சாலைகள், வாகனங்கள், மரங்கள், தாவரங்கள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் முற்றிலும் மறைந்துள்ளன. நகரம் முழுவதும் வெள்ளை மூடுபனிக் கடலில் மிதப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது.
दिल्ली वालों मजा आ रहा है? 10वीं मंजिल से लिया गया यह दृश्य स्वर्ग का नहीं बल्कि नर्क का है. pic.twitter.com/BnE8YPq13O
— आजाद भारत का आजाद नागरिक (@AnathNagrik) December 14, 2025
முதல் பார்வையில் மேகங்கள் சூழ்ந்த அமைதியான காட்சி போலத் தோன்றினாலும், உண்மையில் அது காற்றில் கலந்துள்ள நச்சுப் புகை என தெரிய வருவதால், அதன் அழகு அச்சமாக மாறுகிறது. பட்டப்பகலிலும் தரை தெரியாத அளவுக்கு புகை அடர்த்தியாக இருப்பது, நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இந்த காணொளி வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். NCR பகுதி இனி வாழத் தகுதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சிலர் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் இதே அளவுக்கு மாசுபாடு அதிகரித்தும், இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த காற்று மாசுபாடு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண் எரிச்சல், மூச்சுத் திணறல், இருமல், தலைவலி போன்ற உடல்நலக் குறைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிலைமை இப்படியே தொடர்ந்தால், எதிர்காலத்தில் சுத்தமான காற்று என்பது புத்தகங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே காணப்படும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை இந்த காணொளி வெளிப்படுத்துவதாக சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
