சென்னை, புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் கடந்த 23-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். திருமண தகவல் மையம் மூலம் இரு தரப்பினரும் பேசி இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பின் புதுப்பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று, மறுநாள் முதலிரவு நடைபெற்றது. அப்போது அகஸ்டின் ஜோஸ்வா தாம்பத்திய உறவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. புதுப்பெண், “முதல் இரண்டு நாள்கள் இருவரும் மனம் விட்டு பேசுவோம்; பின்னர் உறவை தொடங்கலாம்” என தெரிவித்துள்ளார். இதற்கு கோபமடைந்த அகஸ்டின் உடனடியாக உறவை தொடங்க வேண்டும் என கதறி கேட்டதாகவும், புதுப்பெண் மறுத்ததைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அவர் அறையில் இருந்த சுத்தியலை எடுத்து தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைகள், கால்கள், நெற்றி உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த புதுப்பெண் அறைக்குள் ரத்தத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர் கதவை பூட்டிவிட்டு அகஸ்டின் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மயக்கமடைந்த நிலையில் இருந்த புதுப்பெண்ணை மறுநாள் காலை உறவினர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஜெரீனா பேகம் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜு விசாரணை நடத்தினர். அகஸ்டின் ஜோஸ்வா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், தாக்குதலில் பயன்படுத்திய சுத்தியலுடன் அகஸ்டின் ஜோஸ்வா வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு தானாக வந்தார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மருத்துவமனையில் போலீசார் புதுப்பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது அவர், “திருமணத்தின் போது அகஸ்டின் தன்னைப் பெரிய வசதியாளர் என கூறினார். நகை வரதட்சணையும் வேண்டாம் என்றார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவர் இரண்டு பெண்களுடன் பழக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இருந்தாலும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்தேன். அவர் என்னிடம் மனம் விட்டு பேசவில்லை; உடனடி உறவில் மட்டுமே ஆர்வம் காட்டினார். திடீரென தாக்கியதால் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம். இனிமேல் அவருடன் வாழ முடியாது என முடிவு செய்துள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.
