சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவரின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு, முகம் சிதைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் (22), கான்கிரீட் வேலை செய்து வந்தார். சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதில் ஆர்வம் கொண்ட இவருக்கு, ரஜிதா மற்றும் ரீனா என்ற இரு திருமணமான பெண்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ரீனாவுடன், செல்வகுமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், ரீனாவை அறிமுகம் செய்து வைத்த ரஜிதாவுடனும் செல்வகுமாருக்குக் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து, செல்வகுமார் தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி ரீனாவும், ரஜிதாவும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.
தன்னைப் பிரிந்து சென்ற ரீனாவின் மீது கொண்ட ஆத்திரத்தில், செல்வகுமார் சமூக வலைதளங்களில் அவர்களைப் பற்றி ஆபாசமாகப் பேசியதோடு, அவர்களின் புதிய நண்பர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரீனாவும், ரஜிதாவும் சமரசம் பேசுவதாகக் கூறி செல்வகுமாரை வரவழைத்தனர்.
அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைந்திருந்த ரீனா மற்றும் ரஜிதாவின் நண்பர்கள் 4 பேர் செல்வகுமாரைச் சூழ்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது முகம் சிதைக்கப்பட்டதோடு, அந்தரங்க உறுப்பும் அறுத்து வீசப்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய முக்கிய நபரான அலெக்ஸ் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
