ஜங்கிள் சபாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சிங்கத்தைப் பார்த்தாலே சிலிர்த்துப் போவார்கள். ஆனால், ஓடும் ஜீப்பிற்குள் சீறிப்பாயும் ஒரு பெண் சிங்கம் திடீரென உள்ளே நுழைந்து, டிரைவர் இருக்கைக்கு அருகில் நின்று அவரை சில நொடிகள் உற்றுப்பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த நடுக்கத்தை நேரில் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சுற்றுலா ஜீப் ஒன்று காட்டில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பெண் சிங்கம் பாய்ந்து வந்து வண்டியின் உட்புறம் ஏறியது. டிரைவரின் முகத்திற்கு மிக அருகில், வெறும் சில அங்குல இடைவெளியில் நின்றபடி அந்த பெண் சிங்கம் அவரை முகர்ந்து பார்த்த காட்சிகள் பார்ப்போரை பீதியடையச் செய்துள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Petcoo (@petcoo26)

இந்த இக்கட்டான சூழலில், டிரைவரும் சுற்றுலாப் பயணிகளும் காட்டிய மனஉறுதி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சிறு சத்தம் போட்டாலோ அல்லது பதற்றத்தில் நகர முயன்றாலோ விபரீதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதால், வழிகாட்டியின் அறிவுறுத்தலின்படி அனைவரும் மூச்சைக் கூட பலமாக விடாமல் ‘சிலை’ போல அமர்ந்திருந்தனர். டிரைவர் கண்ணைக் கூட இமைக்காமல் அமைதி காக்க, சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த பெண் சிங்கம் தானாகவே கீழே இறங்கிச் சென்றது. இந்த வீடியோ உண்மையானதா அல்லது ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று ஒருபுறம் இணையத்தில் விவாதங்கள் கிளம்பினாலும், வனவிலங்கு பூங்காக்களில் உள்ள விலங்குகள் சில நேரங்களில் மனிதர்கள் மீது காட்டும் அதீத ஆர்வமே இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம் என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.