உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், குடும்பத் தகராறில் கணவனே மனைவியின் மூக்கு மற்றும் கன்னங்களைக் கடித்துக் குதறிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பூல் என்பவருக்கும் பானா என்ற பெண்ணிற்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சனை இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பூல், தனது மனைவியின் முகத்தைக் கடித்துக் குதறியதில் அவரது மூக்கிலிருந்து சதை பிய்ந்து வந்ததுடன், கன்னங்களிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் பெண்ணை மீட்ட உறவினர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவர் ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது மூக்கில் ஏற்பட்டுள்ள பலத்த காயத்தைச் சரிசெய்யவும், முகத் தோற்றத்தை மீட்டெடுக்கவும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள கணவர் பூல் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு கணவனே மனைவியின் முகத்தைச் சிதைத்த இந்த மிருகத்தனமான செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.