நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் எட்டு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது செல்லூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சந்தேகப்படும் விதமாக வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்றை போலீசார் மறைத்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது வேனில் மீன் பதப்படுத்தப்படும் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே புதுச்சேரி மாநில உயர்தர மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருந்தது. அந்த வேனுக்கு முன்பு பாதுகாப்பிற்காக கார் ஒன்று சென்றதும்  தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார்  விசாரணை நடத்திய போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே டி.ஆர் பட்டினத்தைச் சேர்ந்த அரவிந்தன் என கூறியுள்ளனர். மேலும் இவருக்கு பாதுகாப்பாக முன்னால் காரில் சென்றவர் காரைக்கால் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழரசன் மற்றும் அரவிந்தன் ஆகியோரை  கைது செய்த போலீசார் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன், பாதுகாப்பிற்காக சென்ற கார் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.