அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.குரு. வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமகவின் முக்கியத் தூணாகவும் விளங்கிய இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காலமானார்.

இவரது அரசியல் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தற்போது அவரது மகள் விருதாம்பிகை “ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற விழாவில், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், குருவின் மகள் புதிய கட்சி ஆரம்பித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு தரப்பினர் செயல்பட்டு வரும் நிலையில், குருவின் தீவிர ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த மூன்றாவது அணி உருவாகியுள்ளது.

இது வரும் காலங்களில் வடதமிழக அரசியலில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.