மகளிர் ஆசியக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், ஹாங்காங் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார் (124 ரன்கள்). ஆட்டத்திற்குப் பிறகு மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்று ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கிய மந்தனா குறித்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால், இந்த வீடியோவில் அவர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க மறுத்துவிட்டதாகவும், அதனால் அவர் தலைக்கணத்துடன் நடந்து கொள்வதாகவும் சில இணையவாசிகள் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவின் உண்மையான பின்னணி முற்றிலும் வேறானது.

மந்தனா எல்லைக் கோட்டின் அருகே நின்று ரசிகர்களின் தொப்பிகள் மற்றும் டி-ஷோ்களில் ஆட்டோகிராஃப் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சில ரசிகர்கள் தங்களது செல்போன் கேமராவை ஆன் செய்து, அவரிடமே செல்ஃபி எடுக்குமாறு நீட்டியுள்ளனர். ஆனால், மந்தனா ரசிகர்களின் செல்போன்களைத் தன் கையில் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, “நீங்களே செல்போனை உங்களிடம் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுங்கள், நான் போஸ் தருகிறேன்” என்று சைகை மூலம் கூறியுள்ளார்.

 

அதாவது, ரசிகர்களைத் தன் அருகில் நெருங்கவிடாமல் செல்ஃபி கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யாகும். மந்தனா ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுக்கவில்லை; மாறாக, எல்லைக் கோட்டிற்குள் நின்றபடியே அவர்கள் செல்ஃபி எடுப்பதற்குத் தேவையான போஸ் கொடுத்துள்ளார்.

பொதுவாகவே ஸ்மிருதி மந்தனா தன் ரசிகர்களிடம் மிகவும் பணிவாகவும் கனிவாகவும் நடந்துகொள்ளக் கூடியவர். எவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தாலும் தனது எளிமையான குணத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். அவர் அடிப்படையில் சற்று கூச்ச சுபாவமும், அறிமுகமில்லாதவர்களிடம் அதிகம் பேசத் தயங்கும் ‘இன்ட்ரோவெர்ட்’  குணமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பையில் தனது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணிக்குச் சாதகமாகத் திகழ்ந்த மந்தனா மீது சுமத்தப்படும் இந்தத் தவறான விமர்சனங்களும், அவர் திமிர் பிடித்தவர் என்று சித்தரிக்கும் வதந்திகளும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், வீடியோவை தவறாகப் புரிந்துகொண்டு பரப்பப்பட்டு வருபவை என்றும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.