தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.

நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ராஜா (41). இவரும், நாசரேத்தை பாஸ்கர் (37) என்பவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் தினமும் ஒன்றாக வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நாசரேத் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் ராஜா மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்குமே போதை அதிகமானதால், திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மேலும் ஆத்திரமடைந்த பாஸ்கர், அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாஸ்கர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இக்கொலை சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தலைமறைவாக இருந்த பாஸ்கரை சில மணி நேரங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். நாசரேத் காவல் நிலையம் அருகிலேயே நள்ளிரவில் கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.