சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நாளை (டிசம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை) தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், சம வேலைக்குச் சம ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. முன்னதாகப் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அரசு தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வெளியாகாததால், “பணி நிரந்தரம் கிடைக்கும் வரை பின்வாங்க மாட்டோம்” எனப் பணியாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னை பாரிமுனையில் இருந்து பேரணி நடத்தத் தூய்மைப் பணியாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனையொட்டி, பாரிமுனை, குறளகம் மற்றும் ராஜாஜி சாலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட முயலும் பணியாளர்களைக் கைது செய்யக் காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போதைய முற்றுகை அறிவிப்பால் சென்னையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.