ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: இந்தியா ‘ஏ’ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்
தோஹாவில் நடந்த ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், பரம எதிரியான பாகிஸ்தான் ‘ஏ’ அணி இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16, 2025) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி, வைபவ் சூர்யவன்ஷி (45) மற்றும் நமன் திர் (35) ஆகியோரின் சிறிய பங்களிப்பால், 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்குக் களமிறங்கிய பாகிஸ்தான் ‘ஷாஹீன்ஸ்’ அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 40 பந்துகள் மீதமிருக்க, வெறும் 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எளிதாக எட்டியது. இது அத்தொடரில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி பெற்ற தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியாகும்.

“>

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி இந்த வெற்றியைக் குறித்துப் பெருமிதம் தெரிவித்தார். தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில், “இந்தியா ‘ஏ’ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய எங்கள் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்கு இது ஒரு கௌரவமான தருணம்.

இளம் கிரிக்கெட் வீரர்களின் ஈர்க்கக்கூடிய, அச்சமற்ற மற்றும் மறக்க முடியாத செயல்திறன் இது. பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,” என்று அவர் பாராட்டினார். இந்தப் போட்டி அதன் முடிவால் மட்டும் அல்லாமல், சர்ச்சைக்குரிய சம்பவங்களாலும் தலைப்புச் செய்தியானது.

இப்போட்டிக்கு முன்னும் பின்னும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த (No Handshake) கொள்கையைப் பின்பற்றியது விவாதப் பொருளாகியுள்ளது. முன்னதாக, 2025 ஆசியக் கோப்பை மற்றும் மகளிர் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி இந்தக் கொள்கையைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.