மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் இடம்பெற்று உள்ளதால் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது தாஹா எனும் சோனு இம்தியாஸ் அன்சாரி என்ற நபர், சமூக ஊடகங்கள் வாயிலாக பர்வீன் என்ற முஸ்கானை காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் தம்பதிக்கிடையே அடிக்கடி சண்டை எழுந்து வந்ததால், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வீட்டைப் பிரித்து தனியாக குடியேறும் விவகாரத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து முஸ்கான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதையடுத்த நாள், ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கோபத்தில் தாஹா, தனது மனைவியை கொன்று அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசி இருக்கிறார். ஆகஸ்ட் 30ஆம் தேதி ஈத்கா ஜக்கி-ஜோபாடி பகுதியில் ஒரு பெண்ணின் தலை மட்டுமே காணப்பட்டதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த தலை முஸ்கானுக்கே சேர்ந்தது என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆரம்பத்தில் தாஹா குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால், செப்டம்பர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை செய்யப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தாஹா தற்போது போலீஸ் காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். செப்டம்பர் 11ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உடல் உறுப்புகளை கண்டுபிடிக்க ட்ரோன் கேமரா, நாய் படை, தடயவியல் குழு, படகு ஆகியவற்றுடன் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
விரும்பி திருமணம் செய்து குழந்தையுடன் வாழ்ந்து வந்த குடும்பத்தில் கணவனே இப்படி மிருகத்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
