மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்த சின்னராஜா (வயது 35), தனியார் டிரைவிங் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரூபாபதி என்ற மனைவி மற்றும் 7 வயது மகன், 5 வயது மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னராஜா, தொடர்ச்சியான தோல்விகளால் 15 லட்ச ரூபாய்க்கும் மேலான கடனில் சிக்கியிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடன் கொடுத்தவர்கள்  தொடர்ந்த அழுத்தம் கொடுத்த நிலையில்   சிக்கிய சின்னராஜா, மன உளைச்சலால் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து காணாமல் போனார். பல இடங்களில் உறவினர்கள் மற்றும் போலீசார் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள ரெயில்வே ட்ராக்கில் சின்னராஜா  ரெயில் முன்  பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த துயரமான சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தின் எதிர்விளைவுகள் மீண்டும் ஒருவரின் உயிரை பறித்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.