திருவாரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க அரசு கடந்த தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
இப்போது தேர்தலுக்காக 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் தருவதாகக் கூறி மக்களை தி.மு.க ஏமாற்றுவதாகவும், அதிக அளவில் கடன் வாங்கி மக்கள் மீது சுமையை ஏற்றி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சாதாரண தொண்டர்களைக் கூட எம்.எல்.ஏ-வாக மாற்றினார் என்று குறிப்பிட்ட சசிகலா, அவர் இருந்தவரை எதிரிகள் அனைவரும் அமைதியாக இருந்ததாகக் கூறினார்.
தான் பெங்களூரு சிறைக்குச் சென்ற காரணத்தால்தான் பலர் இப்போது துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றும், தான் மட்டும் அங்கேயே இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும் என்றும் அவர் பேசினார். இறுதியில், மன்னார்குடி மற்றும் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்
