இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களது தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, சிக்கன நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலவரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த முக்கிய அறிவுறுத்தல்களை நிதியமைச்சகம் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.

​இந்த புதிய உத்தரவின்படி, வங்கி மற்றும் நிதி நிறுவன உயர் அதிகாரிகள் தங்களது தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களை இனி கணொளி (வீடியோ கால்) மூலமாகவே நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் செலவைக் குறைக்கும் விதமாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக படிப்படியாக மின் வாகனங்களுக்கு (EV) மாற வேண்டும் என்றும் நிதியமைச்சகம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.