கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 2 வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளர் தனது மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக கூறி அதற்கு கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் விண்ணப்பத்தை செல்வகுமாரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய செல்வகுமார் திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக உதவி மின் பொறியாளர் சசிகுமாரிடம் பேசி உள்ளார்.

அப்போது சசிகுமார் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அப்போது செல்வகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியதால் சசிகுமார் 8000 ரூபாய் கேட்டுள்ளார். இது தொடர்பாக செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வகுமார் சசிகுமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சசிகுமாரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.