க்ஷஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கேஎம்பி எக்ஸ்பிரஸ்வே அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 16 வயது டீனேஜர் ஒருவர், தனது 7 வயது அண்டை வீட்டுப் பையனை கத்தரிக்கோலால் 20 முறை குத்திக் கொன்று, உடலை அருகிலுள்ள புல்வெளி பகுதியில் உள்ள புதர்களில் தள்ளி மறைத்துள்ளார். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்த காரணம் மிகவும் சிறியது. இரண்டு மாதங்களுக்கு முன்னர், 7 வயது சிறுவன், தனது அப்பாவின் திருடப்பட்ட மொபைல் போனை அந்த டீனேஜர் பயன்படுத்துவதை கவனித்து, பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சிறுவனின் தந்தை, குற்றவாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், அவ்வப்போது நடந்த வாக்குவாதங்களில் அந்த டீனேஜரை அவரது தந்தை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலே அவரது மனதில் பழிவாங்கும் எண்ணம் பெரிதும் உருவானது.
சனிக்கிழமை அன்று, சிறுவன் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு விளையாட வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் குற்றவாளியான டீனேஜ் சிறுவன், அவனை “விளையாடலாம்” என அழைத்து, வீதியை விட்டு வெளியே அழைத்து சென்றார். பின்னர், ஒரு தனியிடத்தில் கொண்டு சென்ற அவன், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் 18 முதல் 20 முறை வரை கத்தரிக்கோலால் குத்தி, உடலை புல்வெளியில் உள்ள புதர்களில் தள்ளியுள்ளார். வீட்டிற்கு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். மறுநாள் காலை குழந்தையின் உடல் கல்வாடி கிராமத்திற்கு அருகிலுள்ள கிரீன் பெல்ட் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் போது குற்றம் ஒப்புக்கொண்ட அவர், “பழிவாங்கவே” இந்த செயலை செய்ததாக தெரிவித்தார். திங்கட்கிழமை குற்றவாளி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். “ஒரு சிறிய விஷயமே இப்படி ஒரு கொடூர முடிவுக்கு காரணமாகிவிடும் என யாரும் எண்ணவேயில்லை. என் மகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என கனவில்கூட நாங்கள் நினைக்கவில்லை” என, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், குழந்தைகளின் மனநிலையை பெற்றோர் எவ்வளவு முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதையும், சின்ன சண்டைகள் கூட எதிர்பாராத அளவுக்கு வன்முறையாக மாறலாம் என்பதையும் வெளிப்படையாக நினைவூட்டுகிறது. சமுதாயத்தில் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பெற்றோர் மற்றும் பள்ளிகள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு வழிகாட்டுவது அவசியமாகியுள்ளது.
