மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டம் வசாய் தாலுகா குரான்வாடி அருகே உள்ள கோச்சிவாடே கிராமத்தில் இயங்கும் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 3 சிறுமிகள், ஒரு சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்றபோது, திடீரென கடத்தல் சம்பவம் நடந்தது.

அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேர், திருநங்கைகள் போல வேடமணிந்து, தங்களுடன் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, 4 குழந்தைகளையும் கடத்த முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், உதவிக்காக சத்தமிட்டதால், அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உடனே மக்களால் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரும் பிடிக்கபட்டு, சரமாரியாக தாக்கப்பட்டனர். பின்னர், பால்கர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மூன்று பேரும் திருநங்கை வேடம் அணிந்து, குழந்தைகளை கடத்த திட்டமிட்டதோடு, அதற்கு ஆட்டோ டிரைவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பால்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்துள்ளார்கள். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பும் இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.