மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறின் போது மருமகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மாமனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மருமகள் பலமாக உதைத்ததே இந்த மரணத்திற்கு காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பகத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சாகேத் (75). இவருக்கும் இவரது மருமகள் புஷ்பா சாகேத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. புஷ்பாவின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகமே இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று புஷ்பாவிற்கும் அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார் தன்னை திட்டுவதை புஷ்பா தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த மாமனார் ஜெகதீஷ் சாகேத், மருமகளின் கையில் இருந்த மொபைல் போனைப் பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் சப்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மாமனார் ஜெகதீஷ் சாகேத் ஒரு தடியை எடுத்து மருமகள் புஷ்பாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மருமகள், 75 வயதான தனது மாமனாரை கீழே தள்ளியுள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல், கீழே விழுந்த மாமனாரின் அந்தரங்க உறுப்பில் புஷ்பா காலால் பலமாக உதைத்துள்ளார். இதில் ஜெகதீஷ் சாகேத்திற்கு கடுமையான உள் காயங்கள் ஏற்பட்டு, அவர் நிலைகுலைந்து போனார். சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், ஜெகதீஷ் சாகேத் ரத்த வாந்தி எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது மூத்த மகன், தந்தையை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மருமகள் புஷ்பா சாகேத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பச் சண்டையில் மருமகளே மாமனாரைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
