புகழ்பெற்ற ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், 6 முறை உலக சாம்பியனுமான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி காம் மற்றும் அவரது முன்னாள் கணவர் கருங் ஓன்கோலர்  இடையேயான குடும்ப மோதல் தற்போது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி காம் தன் மீது சுமத்திய 5 கோடி ரூபாய் மோசடிப் புகாரை முற்றிலும் மறுத்துள்ள ஓன்லர், மேரி காம் மீது அடுக்கடுக்கான கள்ளத்தொடர்பு புகார்களைச் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில் மேரி காம் தனது முன்னாள் கணவர் ஓன்லர் மீது சொத்துக்களை அபகரித்ததாகவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய ஓன்லர், “மேரி காம் கூறும் புகார்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. சொத்துக்களில் இருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு பழிசுமத்துகிறார். நான் 5 கோடி ரூபாய் திருடியதாகக் கூறுகிறார், தாராளமாக எனது வங்கிக் கணக்கைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

18 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்திய எனக்கு இப்போது என்ன மிஞ்சியிருக்கிறது? டெல்லியில் ஒரு வாடகை வீட்டில்தான் நான் வசித்து வருகிறேன். அவரது மூளை கெட்டுப் போய்விட்டது” என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

மேலும் மேரி காம் குறித்து உருக்கமாகப் பேசிய ஓன்லர், “அவர் எனக்குச் செய்த துரோகங்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. என்னை ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல அவர் நடத்திவிட்டார். இன்று உலகப் புகழ்பெற்ற மேரி காம் குத்துச்சண்டை அகாடமியின் அடித்தளத்தை அமைத்தது யார்? அதன் பதிவைச் செய்தது யார்? எல்லாம் நான் தான். ஆனால், இன்று வேறு ஒருவரை அதன் தலைவராக மாற்றிவிட்டார். அவர் எனது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் மேரி காமிற்கு இருந்த கள்ளத்தொடர்புகள் குறித்து ஓன்லர் அதிரடித் தகவல்களை வெளியிட்டார். “கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே மேரி காமிற்கு ஒரு ஜூனியர் குத்துச்சண்டை வீரருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அப்போது குடும்பத்தினர் தலையிட்டுப் பேசி சமாதானம் செய்தோம்.

ஆனால், 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மேரி காம் குத்துச்சண்டை அகாடமியில் பணிபுரியும் ஒருவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக மேரி காமின் வாட்ஸ்அப்  சாட்டிங் மெசேஜ்கள் என்னிடம் உள்ளன. அந்த நபரின் பெயரும் எனக்குத் தெரியும். குடும்ப மானத்திற்காக இத்தனை காலம் நான் அமைதியாக இருந்தேன்என்று ஓன்லர் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இந்திய விளையாட்டு உலகிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.