உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகப் பெற்ற தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடப்பதை கண்டு பயந்துபோன 10 வயது சிறுவன் (பலியான சிறுமியின் அண்ணன்), அதைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது ராஜ்குமார் என்ற கூலித் தொழிலாளிக்கு வினிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், நைனா (4) என்ற ஒரு மகளும் இருந்தனர். வினிதா கடந்த சில நாட்களாக தனது தாய் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என கணவரிடம் பிடிவாதம் பிடித்து வந்துள்ளார்.
ஆனால், வீட்டில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியதால், கூலிப் பணம் கிடைத்தவுடன் அனுப்பி வைப்பதாக ராஜ்குமார் சமாதானம் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவும் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்திற்குப் பிறகு, நள்ளிரவில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கச் சென்றனர். ராஜ்குமார் தனது இரு மகன்களுடனும், வினிதா தனது மகள் நைனாவுடனும் தனித்தனி கட்டில்களில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆத்திரமும் ஆவேசமும் அடங்காத வினிதா, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது 4 வயது மகள் நைனாவின் கழுத்தை துண்டால் இறுக்கியுள்ளார். குழந்தை துடிதுடித்த போதிலும், இரக்கமின்றி வினிதா கழுத்தை நெரித்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்த சமயத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டதால், வீட்டில் இருந்தவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளனர். அப்போது, நைனாவின் 10 வயது அண்ணன் உமங் விழித்துப் பார்த்தபோது, தாய் வினிதா தங்கையின் கழுத்தை நெரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பயந்துபோன அந்தச் சிறுவன், வீட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து இந்த முழு கொடூரத்தையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளான்.
மின்சாரம் வந்த பிறகு, தரை தளத்தில் மகள் அசைவின்றி கிடப்பதைக் கண்ட தந்தை ராஜ்குமார் அதிர்ச்சியில் அலறியுள்ளார். குடும்பத்தினரின் கதறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டனர். அப்போது, தாய் செய்த கொடூரத்தைத் தான் வீடியோ எடுத்துள்ளதாகச் சிறுவன் கூறியதைக் கேட்டு கிராமமே உறைந்து போனது.
उरई: पति-पत्नी के विवाद के बाद एक मां ने अपनी ही 4 साल की मासूम बेटी की गला दबाकर हत्या कर दी। घटना के बाद पूरे इलाके में सनसनी फैल गई, जबकि परिवार में मातम पसरा हुआ है। पुलिस ने आरोपी मां को हिरासत में लेकर बच्ची के शव को पोस्टमार्टम के लिए भेज दिया है। मामले की जांच जारी है।… pic.twitter.com/hYyyq9POhj
— डाइनामाइट न्यूज़ हिंदी (@DNHindi) May 23, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தபோலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் கழுத்து எலும்பு உடைந்ததாலும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் தான் மரணம் நிகழ்ந்துள்ளது என்பது உறுதியானது.
இதையடுத்து, பெற்ற தாயான வினிதாவைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் எடுத்த மொபைல் வீடியோ மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமையும் குடும்ப அழுத்தமும் ஒரு தாயை இவ்வளவு கொடூரமானவளாக மாற்றியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
