வேலையில்லாத இளைஞர்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘கரப்பான்பூச்சி’ என விமர்சித்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’யின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்கள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியும், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் தீப்கே, அண்மையில் ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (Cockroach People’s Party) என்ற பெயரில் ஒரு நையாண்டி கட்சியைத் தொடங்கினார். இந்த விநோத பிரசாரம் நாடு தழுவிய அளவில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறுகிய காலத்திலேயே இக்கட்சியில் பல்லாயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்ததோடு, அதன் சமூக வலைத்தளப் பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடரத் தொடங்கினர். இது அரசியல் மற்றும் சமூக வலைத்தள தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
“கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்டமான முறையில் இந்த ‘ஹேக்கிங்’ சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எங்களது பிரதான ‘எக்ஸ்’ கணக்கு மட்டுமின்றி, அதற்குப் பின்னால் இருந்த மாற்று கணக்கும் சேர்த்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் பேசுகையில், “தற்போது கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எந்தவொரு சமூக வலைத்தளப் பக்கத்தையும் எங்களால் இயக்க முடியவில்லை. எனவே, இனிவரும் நாட்களில் அந்தப் பக்கங்களில் ஏதேனும் பதிவுகள் அல்லது தகவல்கள் வெளியானால், அது எங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் ஒரு கட்சியின் அனைத்து டிஜிட்டல் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது அதன் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
