தந்தையை பணம் கொடுத்துக் கொலை செய்த மகன் உட்பட 10 பேரை மஜௌலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கர்மை படோகர் தோலா பகுதியைச் சேர்ந்த ராஜ்பான் அகாரியா, கடந்த மே 16 அன்று இரவு தனது வீட்டின் அருகே மாயமானார். தொடர்ந்து ராஜ்பானின் தம்பி ரகுவர் அகாரியா, மே 19 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜ்பானைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள காட்டின் எரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு சென்று கிணற்றுக்குள் இருந்த அழுகிய சடலத்தைக் மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன ராஜ்பான் அகாரியா என்பது தெரியவந்தது.
சடலத்தைச் சோதித்ததில், கொலைக்குப்பின் சடலத்தை எரிக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அரைகுறையாக எரிந்த சடலத்தை கிணற்றுக்குள் வீசிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ராஜ்பானின் மகன் கமல் பான் அகாரியா மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரது செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சந்தேகத்திற்கிடமான வகையில் 5,000 ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து கமல் பானிடம் காவல்துறையினர் கடும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தந்தை ராஜ்பான் அகாரியா அடிக்கடி சண்டையிடுவதாகவும், அவரது நடத்தை சரியில்லை என்றும் கமல் பான் தெரிவித்தார். சிறிய விஷயங்களுக்கெல்லாம் பெரிய அளவில் சண்டையிடுவதால் ஆத்திரமடைந்து, தந்தையைக் கொலை செய்ய 5,000 ரூபாய் கூலி வழங்கியதாக ஒப்புக் கொண்டார்.
தந்தையைக் கொலை செய்த மகன் கமல் பான் அகாரியா உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
