தமிழக அரசு மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக, இன்று மாலை 3 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இந்த லேப்டாப்கள் டெல், ஏசிஇஆர், ஹெச்பி போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, இன்டல் ஐ-3 பிராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் விண்டோஸ் 11 போன்ற நவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

​இந்தத் திட்டம் வெறும் இலவசம் மட்டுமல்ல, மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஒரு மாபெரும் கல்விப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI), மென்பொருள் உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்ற நவீன துறைகளில் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக, இந்த லேப்டாப் வழங்கும் திட்டமும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு இடையிலான தொழில்நுட்ப இடைவெளியைக் குறைத்து, அவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்தும் என அரசு தெரிவித்துள்ளது.