சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது பசுவின் காலில் பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டி வைத்துள்ளார். முதன்முதலில் இதைப் பார்ப்பவர்களுக்கு இது விசித்திரமாகத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் மனிதாபிமானக் காரணம் ஒளிந்துள்ளது.
அதாவது பால் பண்ணைத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாடுகளின் கால்களில் ஏற்படும் புண்கள் பெரும் கவலையைத் தருபவை. மாடுகள் புண் இருக்கும் பக்கமே சாய்ந்து அமரும்போது, உடல் அழுத்தம் காரணமாக காயம் தீவிரமடைந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது பசுவுக்கு வலியைத் தருவதோடு மட்டுமல்லாமல், பால் உற்பத்தியையும் கணிசமாகக் குறைக்கிறது.
விலை உயர்ந்த ‘பசு மெத்தைகளை’ (Cow Mats) வாங்க முடியாத ஏழை விவசாயிகள், இதற்கு எளிய தீர்வாக பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துகின்றனர். பசுவின் காயமடைந்த காலில் பிளாஸ்டிக் பாட்டில் கட்டப்படுவதன் மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன: பசு காயமடைந்த பக்கம் அமர முயற்சிக்கும்போது, பிளாஸ்டிக் பாட்டில் நசுங்கி ஒருவித சத்தத்தை எழுப்புகிறது. இது பசுவை எச்சரிக்கிறது.
பாட்டிலால் ஏற்படும் சிறு அசௌகரியம் காரணமாக, பசு தானாகவே காயம் இல்லாத மறுபக்கம் சாய்ந்து அமரப் பழகுகிறது. இதனால் காயத்தில் அழுத்தம் ஏற்படாமல், புண் விரைவில் குணமடைகிறது. இந்த நாட்டுப்புற மருத்துவ முறை குறித்து கால்நடை மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்: அதாவது பாட்டிலை மிகவும் இறுக்கமாகக் கட்டக்கூடாது; இது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கலாம்.
நைலான் கயிற்றிற்குப் பதில் மென்மையான துணிப் பட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். பாட்டிலின் கூர்மையான விளிம்புகள் பசுவைக் கீறாதவாறு டேப் (Tape) ஒட்டப்பட வேண்டும். மாடுகள் அமரும் இடம் ஈரமாக இல்லாமல், காய்ந்த வைக்கோல் அல்லது சாக்குகளைப் பரப்புவது காயத்தை விரைந்து ஆற்ற உதவும். மேலும் விவசாயிகளின் இந்த எளிய கண்டுபிடிப்பு, நவீன வசதிகள் இல்லாத நிலையிலும் கால்நடைகள் மீதான அவர்களின் அக்கறையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
