திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், அங்கு திரண்டிருந்த மக்களின் எழுச்சியைக் கண்டு தனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
திருவண்ணாமலையின் ஆன்மீகச் சிறப்பு, வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆரணி பட்டு, அரிசி போன்ற மாவட்டத்தின் தனித்துவமான பெருமைகளை அவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முதல் நாடாளுமன்ற உறுப்பினரைத் தந்து வரலாறு படைத்த இந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், ‘திராவிட மாடல்’ அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆன்மீகம் மற்றும் தொல்லியல் ரீதியாகப் புகழ்பெற்ற இந்த மாவட்டத்தைப் புதிய வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
