மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், தனது 6 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், தனது மகள் மராத்தி சரியாகப் பேசாமல் இந்தியில் மட்டுமே பேசியதாலும் ஏற்பட்ட அதிருப்தியில் இந்தப் பாதகத்தைச் செய்ததாக அவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அறிவியல் பட்டதாரியான அந்தப் பெண், ஏற்கனவே மனநலப் பாதிப்புகளுக்காகச் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

​கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் கொலை நடந்துள்ளது. மாலை வீடு திரும்பிய கணவரிடம், குழந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாக அந்தப் பெண் நாடகமாடியுள்ளார். குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த காவல்துறை அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு முடிவில் குழந்தையின் மூச்சுக்குழாய் நெரிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, காவல்துறையினர் நடத்திய ஆறு மணி நேர விசாரணையில் அந்தப் பெண் உண்மையை ஒப்புக்கொண்டார்.

​அந்தப் பெண்ணிற்கும் ஐடி துறையில் பணிபுரியும் அவரது கணவருக்கும் 2017-ல் திருமணமாகி, 2019-ல் இந்த பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்தே தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்துள்ளது. மேலும், அந்தச் சிறுமிக்குச் சரளமாக மராத்தி பேச வராததும், இந்தியில் மட்டுமே பேசியதும் அந்தத் தாய்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. “இப்படிப்பட்ட குழந்தை எனக்கு வேண்டாம்” என்று அவர் அடிக்கடி கணவரிடம் கூறி வந்த நிலையில், தற்போது இந்தக் கொடூரச் செயலைச் செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.