உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை துணியை வைத்துத் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண், வீடு திரும்பியது முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும் வலியின் காரணம் தெரியாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட மற்றொரு அறுவை சிகிச்சையில், அவரது வயிற்றுக்குள் இருந்து சுமார் அரை மீட்டர் நீளமுள்ள அறுவை சிகிச்சை துணி அகற்றப்பட்டது.
சுமார் 15 மாதங்களாகத் துணியுடன் வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுக்குப் பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த அலட்சியம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில், மூன்று மருத்துவர்கள், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் இரு சுகாதாரத் துறை அதிகாரிகள் என மொத்தம் ஆறு பேர் மீது நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முறையான விசாரணை நடத்தாமல் காலதாமதம் செய்ததாகவும், ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்த தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
