மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 58 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது.

மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரிதப்ரதா, தற்போதைய சூழலில் பெரும் ஆதரவைத் திரட்டி சபாநாயகரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பிளக்க விரும்பவில்லை என்றும், மம்தா பானர்ஜியே இப்போதும் தங்களின் தலைவராகத் தொடர்கிறார் என்றும் ரிதப்ரதா தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில், கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகள் மற்றும் கட்சிக்குள் நிலவும் தனிநபர் ஆதிக்கத்திற்கு எதிராகவே தங்களது போராட்டம் என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், அபிஷேக் பானர்ஜி போலி ஆவணங்களைத் தயாரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருவது அரசியல் களத்தில் கூடுதல் சூடுபிடித்திருக்கிறது.