விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார். “தற்போதுள்ள அரசு பெண்களுக்கு மட்டும் இலவசப் பயணம் என்று அறிவித்து, ஆண்களையும் பெண்களையும் சமூக ரீதியாகப் பிரித்துவிட்டது” என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

​குறிப்பாக, “அதிமுக ஆட்சி அமைந்ததும், ஆண்கள் தங்களது காதலி அல்லது மனைவியுடன் இலவசமாகப் பேருந்தில் ஏறித் திரையரங்குகளுக்குச் சென்று வரலாம்” என்று அவர் பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, அதிமுக ஆட்சிக்கு வந்தால் நகரப் பேருந்துகளில் ஆண்களும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வாக்குறுதியைத் தலைமை அறிவித்திருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் இந்தத் கூடுதல் ‘ஆஃபர்’ சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.