திரைத்துறையில் நிலவும் பாரபட்சம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, ஒரு உயரிய கலைஞரை மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் குறிவைப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சினிமாத்துறை தற்போது சமூகம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது. படைப்பாற்றல் இல்லாதவர்களே அதிகார மையத்தில் அமர்ந்து முடிவுகளைத் தீர்மானிக்கின்றனர்” என தனது மனவருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். இது திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன். மதம், மொழி, அடையாளம் ஆகியவற்றைத் தாண்டி கலையை உருவாக்கும் ஒரு ஒப்பற்ற இசைக் கலைஞரை திட்டமிட்டு குறிவைப்பதும், அதே வேளையில் இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இது குறித்து அதிர்ச்சியூட்டும் மௌனம் காப்பதும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இந்திய இசையை உலகளாவிய மேடைகளுக்குக் கொண்டு சென்றவர் ரகுமான். அவர் பாரபட்சத்தையும் வெறுப்பையும் அல்ல, மாறாக மரியாதையையும் நன்றியையும் பெறத் தகுதியானவர். இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை” என்று கனிமொழி தனது பதிவில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதன்மை கலாச்சாரத் தூதராகத் திகழும் ஒரு கலைஞர் மீதான விமர்சனங்களுக்கு எதிராக கனிமொழி முன்வைத்துள்ள இந்தக் கருத்து, அரசியல் மற்றும் திரைத்துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
