சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், கணவர் தன் மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, குறிப்பிடத்தக்க அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவைத் திருத்தி புதிய தீர்ப்பை வழங்கினார்.
மனுதாரரின் மகன், தற்போது நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். அவரது கல்விக்காக ரூ.2.77 லட்சம் செலவாகும் நிலையில், அந்த தொகையை வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர் தெரிவித்தார். மேலும், மனைவிக்கு ஏற்கனவே நிலையான சொத்து, வருமானம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார் என்பதற்கான ஆவணங்களும் மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, “மனைவிக்கு தனியாக ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
