இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், அவரது மனைவியும் இந்தியா – நியூசிலாந்து போட்டியை காண வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டி எம்.எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது. இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் போட்டியை காண வந்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் வந்திருந்தார். தோனி பெவிலியனில் இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டியை காண எம்எஸ் தோனி வருகை தந்தார் :

டி20 சர்வதேச போட்டியை காண 2 சிறப்பு பார்வையாளர்கள் வந்திருந்தனர். அது வேறு யாருமல்ல, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவியும்தான். இதற்கிடையில், கேமரா அவரை காண்பிக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள் தோனி-தோனி என்று கத்துவதைக் காண முடிந்தது. பல நாட்களாக தேசிய பணியில் இருக்கும் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் அணியுடன் நின்று தேசிய கீதத்தை பாடிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் தோனி மற்றும் சாக்ஷியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பயிற்சியின் போது தோனியும் காணப்பட்டார். இந்நிலையில், பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அவர் இந்திய வீரர்களுடன் பேசுவது போல் இருந்தது. தற்போது அவரும் போட்டியை காண வந்துள்ளார். தனது கணவரை உற்சாகப்படுத்த அடிக்கடி மைதானத்திற்கு வரும் சாக்ஷி, பல நாட்களுக்குப் பிறகு மைதானத்தில் காணப்பட்டார். மறுபுறம், தோனி தற்போது அதே மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அவர்களின் முடிவும் சரிதான், நியூசிலாந்து இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. 20 ஓவரில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மோசமாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.20வது ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச வந்து 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்தார். டி20 சர்வதேச வாழ்க்கையில் இது அவரது மூன்றாவது அரை சதம். அதே சமயம் டெவோன் கான்வே 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். டி20 சர்வதேச வாழ்க்கையில் இது அவரது ஒன்பதாவது அரைசதமாகும்.இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரம் அர்ஷ்தீப், குல்தீப், ஷிவம் மாவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் இன்னிங்ஸில் இலக்கை துரத்திய இந்திய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. இந்தியா 15 ரன்களில் 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது. அங்கிருந்து சூர்யகுமார் யாதவ் (47), ஹர்திக் பாண்டியா (21) ஆகியோர் இன்னிங்ஸை எடுத்து சென்றனர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 68 ரன்கள் சேர்த்தனர். பின் சூர்யா, ஹர்திக் அவுட் ஆக, கடைசியில் வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் விளாசி போராடியபோதும் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுக்க, கிவி (நியூசிலாந்து) அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.