மத்தியப் பிரதேசத்தின் போபாலில், வங்கி மேலாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு அவரது கணவரே செய்துள்ள சட்ட மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் திருமணமான நிலையில், கணவரின் கொடுமை தாளாமல் அந்தப் பெண் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அப்போதுதான், தனது கணவர் 2019-லேயே நீதிமன்றத்தில் தவறான முகவரியைக் கொடுத்து, தனக்குத் தெரியாமலேயே ரகசியமாக விவாகரத்து பெற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
விவாகரத்து பெற்ற விஷயத்தை மறைத்து, கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் கணவன் என்ற பெயரில் அவர் உடல் ரீதியான உறவையும் தொடர்ந்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது புகாரில், தனது கணவருக்கு மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கை இருந்ததாகவும், தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த அவர், மனைவியைக் கடுமையாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.
ஒரு பெண்ணை ஏமாற்றி உடல் உறவு கொள்வது சட்டப்படி பாலியல் வன்கொடுமை என்பதால், போபால் மகளிர் போலீசார் அந்த நபர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
