சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது. ஒரு நபர் உயிருள்ள தேனீ ஒன்றின் முதுகில் மிகச்சிறிய மைக்ரோ கேமரா ஒன்றை பொருத்தி அதை பறக்கவிட்டுள்ளார். அந்தத் தேனீ பூக்களின் மேலே பறப்பது, ஒரு பறவையின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்புவது என அந்த வீடியோ பார்ப்பவர்களை சீட் நுனிக்கே கொண்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தத் தேனீ தனது கூட்டிற்குள் (Bee Hive) நுழைந்து, அங்கே ஆயிரக்கணக்கான தேனீக்களுக்கு நடுவே இருக்கும் ‘ராணி தேனீயை’ காட்டும் காட்சி நிஜமாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது. இயற்கை இவ்வளவு அழகாக இருக்குமா என பலரும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
சுமார் 70 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்த இந்த வீடியோவைச் சுற்றி தற்போது ஒரு பெரிய சர்ச்சையே கிளம்பியுள்ளது. “இவ்வளவு சிறிய தேனீயால் கேமரா மற்றும் பேட்டரியின் எடையைத் தாங்க முடியுமா?” என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். நுணுக்கமாகப் பார்த்தால், சில இடங்களில் கேமராவின் பிம்பமே வீடியோவில் தெரிவது இது ஒரு போலி வீடியோ என்பதற்கான சான்றாக உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பக்கமே செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வீடியோக்களை உருவாக்குவதற்கு பெயர்பெற்றது என்பதால், இது முற்றிலும் AI-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும், எடிட்டிங் மற்றும் தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சியைப் பார்த்து மக்கள் மிரண்டு போயுள்ளனர்.
