பெங்களூருவின் மிகவும் பரபரப்பான சில்க் போர்டு ஜங்ஷன் அருகே உள்ள ராகி குடா மேம்பாலத்தில் நடந்த இந்தச் செயல், ஒட்டுமொத்த நகரத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வாலிபர் மேம்பாலத்தின் மீது நின்றுகொண்டு, பட்டாசுகளைக் கொளுத்தி கீழே ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கு நடுவே வீசியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் கீழே வாகனங்கள் வேகமாகச் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறிப் போயினர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், ஒரு பெரிய விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
The #BengaluruPolice are on the lookout for a mischievous youth who lit firecrackers on Ragi Gudda flyover and threw them onto the road below (near Silk Board junction).
No injuries reported so far. pic.twitter.com/TI3rip0X2K
— Hate Detector 🔍 (@HateDetectors) January 14, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த வாலிபரின் பொறுப்பற்றச் செயலுக்கு எதிராகப் பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “சாகசம் என்ற பெயரில் மற்றவர்களின் உயிருடன் விளையாடுவதா?” என நெட்டிசன்கள் பெங்களூரு காவல்துறையினரை டேக் செய்து ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்ட காவல்துறையினர், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து அந்த வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
