மத்தியப் பிரதேசத்தில் வெறும் 100 ரூபாய் மதிப்பிலான கோதுமையைத் திருடிவிட்டு, 45 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த 1980-ஆம் ஆண்டு கார்கோன் மாவட்டம் பால்காவாடா பகுதியில் உள்ள ஒரு வயலில் இருந்து 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமை திருடப்பட்ட வழக்கில், அப்போது 20 வயதாக இருந்த சலீம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான சலீம், தனது அடையாளத்தை மறைத்து பக்கத்து மாவட்டமான தாரில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட கால வழக்குகளில் நிலுவையில் உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கும் சிறப்பு வேட்டையின் போது, சலீமின் கூட்டாளி கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தற்போது 65 வயதாகும் அவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு “சட்டத்தின் கரங்கள்” நீண்டிருப்பதை கண்டு சலீம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
