தமிழக அரசியலில் “சின்னம்மா” சசிகலா மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டார். அடுத்த மாதம் மதுரை மண்ணில் 19 அல்லது 21-ம் தேதிகளில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதோடு, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் சுமார் 30 தொகுதிகளைக் குறிவைத்து அதிமுகவிற்கு எதிராகப் பலமான வேட்பாளர்களைக் களமிறக்க சசிகலா வியூகம் வகுத்து வருகிறார். அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க அவர் துடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சசிகலாவின் இந்த “மதுரை மாநாடு” திட்டம் அதிமுக மற்றும் பிற அரசியல் வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
