இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் சீக்கியப் பெண் ஒருவரை மதம் சார்ந்த வெறுப்புணர்வுடன் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, வால்சால் பகுதியில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க சீக்கியப் பெண்ணை, ஜான் ஆஸ்பி (32) என்ற நபர் பின்தொடர்ந்துள்ளார். அந்தப் பெண் வீட்டிற்குள் நுழைந்ததும், பின்னாடியே அத்துமீறி நுழைந்த ஆஸ்பி, கையில் வைத்திருந்த மரக்கட்டையால் அவரைத் தாக்கி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

தாக்குதலின் போது, அந்தப் பெண்ணை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் எனத் தவறாகக் கருதிய ஆஸ்பி, அந்த மதத்திற்கு எதிரான வசைச்சொற்களைக் கூறித் தாக்கியுள்ளார். “நான் அந்த மதத்தைச் சேர்ந்தவள் அல்ல, நான் ஒரு சீக்கியப் பெண்” என்று அந்தப் பெண் கதறியும், ஆஸ்பி தனது வெறிச்செயலைத் தொடர்ந்துள்ளார். பின்னர் அங்கிருந்த நகைகள் மற்றும் செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த ஜான் ஆஸ்பி, டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள், கைரேகை மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற வலுவான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அன்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், “அவர் கையில் ஒரு கட்டையை வைத்திருந்தார். ஒளியை அணைத்துவிட்டு, என்னிடம் தகாத முறையில் பேசினார்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெப்பரல் கூறுகையில், “இத்தகைய கொடூரமான குற்றத்தைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதே சரியானதாக இருக்கும். இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஜான் ஆஸ்பிக்கான தண்டனை விவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினப் பெண்களின் பாதுகாப்பு குறித்துக் காவல் துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.