அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், தன்னிடம் உதவி கோரி வந்த மைனர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆலோசகிக்கு (Counselor) அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

மெக்டொவல் உயர்நிலைப் பள்ளியில் ஆலோசகராகவும், கைப்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றியவர் ஜெசிகா ஃபின்லி. கடந்த 2023-24 கல்வியாண்டில், 14 வயது மாணவி ஒருவர் தனக்கு இருந்த மனப்பதற்றம் காரணமாக உதவி தேடி ஜெசிகாவை அணுகியுள்ளார். மாணவியின் மனநிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஜெசிகா, அவருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், அந்த மாணவியைத் திட்டமிட்டுத் தனது ஆசை வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.

விசாரணையில், அந்த மாணவிக்கு 15 வயதானபோது ஜெசிகா அவருடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது அம்பலமானது. குறிப்பாக, பள்ளி வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திலேயே பலமுறை இக்கொடூரச் செயல்களில் அவர் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், இருவரும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகள் மூலம் இது  கண்டறியப்பட்டது.

மாணவியின் பெற்றோர் அவரது செல்போன் செய்திகளைப் பார்த்த பிறகுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து மாணவி கூறுகையில், “இந்தத் தொடர்பை துண்டிக்க முயன்றபோதெல்லாம், ஜெசிகா தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வேன் என மிரட்டினார். இதனால் நான் அந்த உறவைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ஜெசிகா ஃபின்லி, பின்னர் ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் 16 குற்றச்சாட்டுகளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்குக் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணையின் போது மாணவியின் வாழ்க்கையைச் சீரழித்ததற்காக ஜெசிகா கண்ணீர் விட்டு மன்னிப்பு கோரினார். இந்தச் சம்பவம் அமெரிக்கக் கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.