கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு மதம் மாற்றம், பெயர் மாற்றம் மற்றும் பலாத்கார வழக்கு மிரட்டல் என தொடர் சர்ச்சைகளை உருவாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றும், அதனையொட்டி கொடுக்கப்பட்ட காவல் புகாரும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடக்க மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் குமார் கோகவி என்ற இளைஞர், தஹ்சீன் ஹோசமணி என்ற பெண்ணுடன் கடந்த மூன்றாண்டுகளாக திருமணத்துக்கு முன்னதாகவே உறவில் இருந்துள்ளார். கடந்த 2024 நவம்பர் மாதம் இருவரும் சட்டப்படி திருமண பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, தஹ்சீன் ஹோசமணி, முஸ்லிம் சடங்குகளின்படி மறுமுறையும் திருமணம் செய்ய வேண்டுமென வற்புறுத்தியதாக விஷால் கூறியுள்ளார். அதன்படி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முஸ்லிம் சடங்குகளுடன் திருமணம் நடந்ததாகவும், அந்த நிகழ்ச்சிக்காலத்தில் மௌலவியின் வாயிலாக தன்னுடைய பெயர் தெரியாமலேயே மாற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், தஹ்சீனின் தாயார் பேகம் பானு மற்றும் தஹ்சீனும் சேர்ந்து, “இஸ்லாத்திற்கு மாறவில்லை என்றால் உன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படும்” எனக் கூறி மிரட்டியதாகவும், கட்டாயமாக தொழுகை நடத்தச் சொல்லி, ஜமாத்தில் கலந்து கொள்ள அழுத்தம் தந்ததாகவும் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், விஷால் குடும்பம், ஹிந்து சடங்குகளுடன் புதிய திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்த தஹ்சீன், பிறகு தனது குடும்பத்தின் அழுத்தத்தால் திட்டத்தில் இருந்து விலகியதாக விஷால் கூறுகிறார்.

விஷால் குமாரின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், மதம் மாறும் விவகாரங்களும், அதன்வழி ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் மீதான உணர்வுகளை த சமூக வலைதளங்களிலும் பெரிதும் கிளப்பியுள்ளது.

மேலும் இது போன்ற சம்பவங்களில், இருவருக்கும் சமமாக சட்டபூர்வமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு என கூறப்படுகிறது.