தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கை, அதை உணர்ந்து பிரேமலதா முடிவெடுப்பார் என நம்புகிறேன்” என்று கூறிய அவர், அதிமுகவோ அல்லது எடப்பாடியாரோ கூட்டணிக்காக யாருடைய வாசலையும் தேடிப் போய் தட்ட வேண்டிய அவசியத்தில் இல்லை எனத் தேமுதிகவைச் சீண்டும் வகையில் பேசியுள்ளார்.

​மேலும், எடப்பாடியார் மிகுந்த பலத்துடனும் வளத்துடனும் இருப்பதாகவும், அவரோடு இணைந்திருக்கும் கட்சிகள் அந்தப் பலத்தை மேலும் அதிகரித்துள்ளன என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். “கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம், ஆனால் அதற்காக யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அதிமுக பலவீனமான கட்சி கிடையாது” என ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த அதிரடி விமர்சனம் அதிமுக – தேமுதிக இடையே இணக்கமான சூழலை உருவாக்குமா அல்லது விரிசலை ஏற்படுத்துமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.