தமிழகத்தில் கோடைகாலம் நெருங்கி விட்ட நிலையில் இப்போதிலிருந்தே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டும் சூழலில், அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, மெல்லிய ஆடைகளை அணிவது, பகலில் அத்தியாவசியம் என்றால் குடையுடன் வெளியில் செல்வது போன்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. மேலும், பகல் நேரத்தில் குழந்தைகளை விளையாட வெளியில் அனுப்ப வேண்டாம் எனவும் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்க்கவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது