தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அவர், தமிழகத்தின் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகக் களத்தில் நின்று பணியாற்றும் என்று உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, “மண்ணுக்கும் மக்களுக்குமான ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலை, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நின்று சட்டமன்றத்தில் முன்னெடுப்போம்” என்று அவர் கூறியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் அமைச்சரவை பட்டியல் குறித்தும், பதவியேற்பு விழா குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் சூழலில், சீமானின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் சமரசமற்ற போராட்டத்தை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தொடரப் போவதாக சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால் இனிவரும் காலங்களில் தமிழக சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.