ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில், இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த விறுவிறுப்பான போட்டியின் போது, இந்திய வீராங்கனைகளுக்கிடையே மைதானத்தில் அரங்கேறிய எதிர்பாராத விசித்திர விபத்து ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 11-வது ஓவரின் போது, பாகிஸ்தான் வீராங்கனை நடாலியா அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே நின்றிருந்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தடுத்தார்.

 

பின்னர், பந்துவீச்சாளர் முனைக்கு பந்தை ஜெமிமா வேகமாக எறிய, அங்கு நின்றிருந்த இளம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் அதை சரியாகப் பிடிக்கத் தவறினார். இதனால் ஜெமிமா வீசிய பந்து நேரடியாக ஸ்ரேயங்காவின் அடிவயிற்றுப் பகுதியில் பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த ஸ்ரேயங்கா உடனடியாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இந்த இக்கட்டான சூழலிலும், சக வீராங்கனையான ஜெமிமா நிலைமையை உணராமல் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தபடி நின்றார். உடனே மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்து வந்து ஸ்ரேயங்காவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வலியிலிருந்து மீண்ட ஸ்ரேயங்கா, தொடர்ந்து விளையாடினார். இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.